Monday, 23 December 2013

வசை பாடிகள்

 ஒரு சொல்
  ஒரு வரி
  ஒரு கட்டுரை
 எவை வேண்டும் என்றாலும்
 நம்மை தாக்கலாம்...

 நம் எதிரிகளிடமிருந்தோ,
 நண்பர்களிடமிருந்தோ ,
 உறவுகளிடமிருந்தோ
 யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம்..

 இவ்வசை பாடிகள்
 ஓங்கி  உயர்ந்த
 மரத்தின் இளந்துளிர் போல்
 எண்ணற்ற பசுமையை சுமந்து
 மெதுவாய் செதுக்குவர் - நம்
 மனம் கீறும் வசைகளை..

 பருவம் எய்திய ஆண் குரங்கைப் போல்
 எங்கும் அலைந்து திரியும் அவர்களின்
 வசை பாடல்கள்..

 இலக்கற்ற சிறகாய் காற்றில்
 பறந்து வந்து உங்களை வதைக்கும் முன்
 வேர் அறுத்து விடுங்கள் அவ்வசை பாடல்களை...



 சில நாட்களுக்கு முன்பு
 சுட்டெரிக்கும் வெய்யிலில்

 சிகரெட் பிடிக்க கடைக்குச்சென்றேன்
 அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்த

 சிறுமியின் பாண்டியின் அழகில்
 வைத்த கண் மாறாமல்

 அவள் கால்களுடன் என்
 கண்களும் கட்டங்கள்  தாவிற்று..

 என் அருகில் வந்து நின்ற
 இளைஞரின் மனதில் எந்த வித சலனமும் இல்லை

  மிடுக்கான உடையிலேயே
 மார்க்கெட்டிங் ரெப்  என தெரிந்துகொண்டேன்.

 அவசரமாய் ஒரு டீயினை பருகி
 பில்டரை  பற்ற வைத்து - தீக்

 குச்சியினை கோடுகளில்  போட்டு
 பாராமல் சென்று விட்டான்...

 குழந்தை பாராமல் கால் வைத்து
 கதறி  அழ- வாங்கிய சிகரெட்டை 

 பற்றவைக்கக் கூட மனமில்லாமல்
 அவளையே  பார்த்துக்கொண்டிருந்தேன்..

 அவள் தந்தையோ " ஒன்னுமில்ல சாரே தண்ணி
 ஊத்தினா சரியாகிடும் " என என்னை தேற்ற முயன்றார்

 கையில் காசை கொடுத்துவிட்டு
 கால்கள் தானாய் நடக்க

 முதன் முதலில் காசின்  மீது வெறுப்பு வந்தது
 பற்றாத சிகரெட்டும் என்னை சுட குப்பையில் வீசி எறிந்தேன்..

 உருண்டையாய் உறங்கும் இந்த பூமி பந்தில் 
 உயிர் பிரியும் வரை வலிகளும், அனுபவங்களும்

 மட்டுமே வாழ்க்கையாய் வாழ சபிக்கப்பட்டோம் நாம்...
 எரியும் அட்தீக்குச்சியின் புகையை போல 
 

Wednesday, 30 October 2013

80.
ஒருவித முன் அனுபவம்
சிலசில பின் கூற்றுக்கள்
பல பல சச்சலப்புகள்
இவையாவும் ஒரே கோடாய்
பயணிக்க சிலவரங்களும்
பார்த்துத்தவிக்க வலிகளும்
இயங்கிய சிறு பொழுதினுல்
இயங்காமல் இதயம் சுழல
காதல் மட்டும் ஆட்சிசெய்யும்
மெய் ஞான சக்கரத்தில்  
79.
நானும் குற்றாலமும் #1

எங்க குடும்பத்துல ஏதாவது சொன்னா ''ஆமா நீ பெரிய அண்ணாவினு கிண்டல் பண்ணுவாங்க....

இதை என் நண்பர்களுடன் விளையாடும் பொழுது சொன்னால்

''ஙே,..ஙே..''னு முழிப்பார்கள...

எனக்கு அது புரியாம எங்க அப்பாகிட்டயோ இல்லை அத்தைகிட்டயோ கேட்டதாக ஞாபகம்

அதுக்கு அவங்க ''நம்ம குற்றாலம் கோவில்ல அம்பாள் சன்னதில பிள்ளையாருக்கு பக்கத்துல ஒரு போத்தி உண்டு அது நம்ம அப்பாமை வகையரா போத்தி...அவர அண்ணாவினு கூப்பிடுவாளாம்...அவரு பிரம்மச்சாரியாவே வாழ்ந்து சின்ன வயசுல முக்தி அடைஞ்சிட்டாராம்''னு சொன்னாங்க...

அது உண்மையா பொய்யானு தெரியாது ஆனால்,
இப்போ வரைக்கும் எப்போ குற்றாலநாதர் கோவிக்கு போனால் அங்கு குழல்வாய்மொழி அம்பாள் (பேறு செமையா இருக்குல) சன்னதில இருக்குற பிள்ளையாரையும் அந்த போத்தியயும் தவறவிட்டதில்லை...
78.
Dedicated to my fav.wiriter.charu nivedita 

சில கனவுகளும் 
சில சமிக்ஞைகளும் 
என்றும் மாறாது 
அசைவற்ற மௌனத்தின் 
பெரும் வயிற்றில்
பேருகால பிள்ளையாய் 
உதைக்கும் பொழுதுகளிலும்
மித மிஞ்சிய காதலிலும்
மிகக்கசப்பான வார்த்தைகளிலும்
சீறாய் போகும்
காணல் நீரோடையாய்......
.
விக்னேஷ்
77.
ஒருமுறை மட்டும் உயிர்கொள்ளும்
விஷமாகவும் ஆசை

விசயம் தெரிந்தும் ஆலகாலனாய்
நீ அருந்திய பிறகும்

உன் தொண்டைக்குழியில் மாட்டித்தவிப்பேன்
மாறாமல் உன்னையும் ரசிப்பேன் 

76.
நான் எழுதிய கதையின் நடுவே எழுதிய கவிதை

"காற்றுபுகும் உடம்பினோட
காதலும் காமமுட்கிப் புக
எவ்வகையாயினும் அவ்வகை
ஊடல் களிக்கவே - மாற்றம்
மனதினும் மறவாத காலம்
சேர்க்கும் மாயவிந்தையினை’’  
75.
என் எழுத்துக்களின் மிக
நீண்ட விமர்சனம் -உன்
நீண்ட மௌனமும்,
பின் கிட்டும் முத்தமும்.... ♥♥

74.
ஒருமுறை மட்டும் உயிர்கொள்ளும்
விஷமாகவும் ஆசை

விசயம் தெரிந்தும் ஆலகாலனாய்
நீ அருந்திய பிறகும்

உன் தொண்டைக்குழியில் மாட்டித்தவிப்பேன்
மாறாமல் உன்னையும் ரசிப்பேன்

73.
சவுகரியங்கள் பலவாயினும்
அசவுகரியங்களுக்கு மட்டுமே

மனம் விரும்பி அழைப்புவிடுக்கிறது
காதலென்னும் சொப்பனம் வழியே... 
72.
இரவு உண்ட மிச்ச கட்டுச்சோற்றை
ஓரம் கட்டிவிட்டு

ஒய்யாரமாக காலை ஆட்டி
மனதில் தோன்றிய

கவிதைகளை எல்லாம்
ஓலைச்சுவடியில்

ஓங்காரமாய் பதிவு செய்து
ஓய்வெடுத்து தூங்கி-பின்

அதிகாலை துயிலெழுந்து
ஆத்தங்கரை நீர் மூழ்கி

ஆசுவாசமாய் கொலைப்பசியுடன்
கட்டுச்சோற்றைத்திரந்தால்

கரப்பான் பூச்சிகளும்,கரிய எலிகளும்
வலியை போக்க அழகாய்

உண்கிறது மிச்சமிருந்த புளியோதரையை
தோள்துண்டை உதரிவிட்டு

தூவென துப்பி நடந்தான்
விளாசமில்லா விரதக் கவிஞன்
71.
அயராத மனமும் 
ஆழ்ந்த இரங்கலும்
என்றும் விடியும் நிலவும்

உன் காலடி சத்தம் 
மட்டும் கேட்க துடிக்கும்
நன்பகலும்,பசியும்,பினியும்

உவகை தரும் பேச்சும்
அழிவில்லா துயரமும்
முடிவில்லா மவுனமும்

எங்கோ தோன்றி
எங்கோ மறைகின்றன
நீ முனங்கி புரண்டு

என் மார்பில் குழந்தையாய்
தூங்கும் பொழுது......................................

70.
நல்ல வேளை
நம் காலத்தில்
சந்தமாமா (அம்புலி மாமா) கதைகள்
வழக்கொழிந்து போயிருந்தது

இல்லை என்றால்
என் கவிதைகளும்
உனக்கு குப்பைகளாகும்
என் சந்தமாமா நீயாகியிருப்பாய்... 
69.
ஒளிவட்டங்கள் பின்னால் சுழல
நிம்மதி தேடி மரநிழலோடு நடந்தான்
அமைதி இழந்த போதிமைந்தன்
68.
தேவதைகளாக இதயத்தில் இடம்பிடித்து
இம்சிக்கின்றன செல்ல சைத்தான்கள்....

விரல் நகம் தேய குறுஞ்செய்தி அனுப்பி
விடியும் முன் முத்தம் கேட்கிறாள்'' 


67.
எல்லாத்துக்கும் கவிதை எழுதுவோம்ல....

இதே என் காய்ச்சல் கவிதை
---------------------------------------

என்னைச்சுற்றியும் குளிரெடுக்க
உடல் எங்கும் நடுநடுங்க
உள்ளுக்குள் அனலடிக்க

அம்மாவின் அரவனைப்பில்
சிறுபிள்ளையாய் மீண்டும்
எறும்புக்கடி ஊசியும்

முதலில் தித்திப்பாய்
சர்கரையும் -பின்
தண்ணீருடன் கலந்த

மாத்திரையும் கசப்புத்தெரியாமல்
முகம் சுழித்து முழுங்க

இக் காய்ச்சலும் காதல்
கொண்டு படுத்துதடி
உன்னைப்போல.... <\
66.
இப்படியும் வரிகள் வரும் நண்பர்களுக்காகவும்
------------------------------------------------------------------

விஷமம் இல்லா கள்ளச்சிரிப்பில்
விடியலும் கடந்து போகும்
விரல் நுனி பனித்துளியாய்
விதர்பன காதலும் உடன் காமமும்

மனம் மட்டும் பந்தைய
குதிரையாய் குதித்தோட
என்னை அடக்கி ஆளும்
ஜாக்கியாக என் காதல்
மட்டுமே உண்டு
நீ என் மேல்
பந்தையம் கட்டிய
சூதாட்டகாரி மட்டுமே....

என்னை பாதிக்கும் சில
விசயங்களை ஏனோவென
கடந்து போகும் மக்களைப்போல்
நீயும் உள்ளாய்...
உன்னையும் கடந்துவிடுவேன்
இக்காதல் மட்டும் நம்மிடையே
இல்லை என்றால்.....
65.
மன மென்னும்
பச்சை மிருகம்
காம மென்னும்
சிகப்பு உணவை

காத லென்னும்
வெள்ளை கரண்டியில்
நா படாமல்
பல்லிடுக்கில் பதுக்கிவைத்து

நம்மை கொன்று
புதைத்து மென்று
புனைவது தெய்வீகமாம்.
64.
மனங்கொத்தி பறவை
சில தூரம் காதல்
வானில் சிறகை
விரித்து பறந்து

காமமென்னும் பல்லக்கில்
அயரந்து ஆடி
கவிதை என்னும்
சவுண்டிக்கொத்தனுக்கு
காத்துக்கிடக்கிறது.....
63.
உன்னுடள் பாகங்களைவிட
என் அலைபேசி அதிக முத்தங்கள்
பெற்றிருக்கும் நாம் இருவரும்
தனித்திருந்தாலும் ஒன்றினைக்கும்
நற்செயலுக்காக.
62.
மெட்டுக்கள் பல ரீங்காரமிடும்
மெல்லிய சண்டைகளில் மட்டும்
அன்பு புலப்படும்

ஆற்றல் மட்டும் ஆள்வது
மனமென்னும் நார் குகை தான்
குகை வாழ் மனிதராக

காதலும் பிறக்கின்ற இடம்
வீட்டிலிருக்கும் இனிய பொழுதுகளும்
விலாசமில்லாமல் சண்டையிடும்

விழுப்புண்ணுடன் விதியென்னும்
மெல்லிய சாவியின் வழியே
வார்த்தை ஜாலத்தில்....
61.
முன்பு மொக்கை கவிதைகளுக்கும்
உன்னிடம் முத்தங்கள் கிட்டும்
இன்று காதல் நயம் சொட்ட
எழுதினாலும் 'நைஸ்'என 
விலகிச்செல்கிறாய் என் 
கவிதையும் காதலும் உன் 
பொருப்பென்னும் உணர்வில்லாமல்

60.
நான் எழுதிய வரிகளில்
உனக்கானதும் எனக்கானதுமாக
வரிகளை பிய்தெடுத்து
அசைந்தாடும் இதய
பேழையில் வைத்து
காற்றில் மிதக்கவிடுகிறேன்
நம் காதலின் பிள்ளைகளன்றோ
அவை.....
நம் சண்டைகளிடமிருந்து
அவை சாகமல் தப்புவதற்காக....
59.
என்னதான் ஆகாசமேறி
நிலவினைப் பிடித்து வந்தாலும்
ஷாப்பிங்க் மாலில்
கையில் பைகளுடன்

எக்ஸலேட்டரில் பார்த்து
அடியெடுத்து வைக்கும்
பெண்கள் தத்தித்தவழுந்து
நடைபழகும் குழந்தைகளைவிட
மிக அழகே.....
58.
கனவுகள் மிகப்பெரியது
நீ தூங்கும் பொழுதும்
பின் துயிலெழுந்து அதை
ரசித்து சொல்லும்பொழுதும்
நான் லயித்து கேட்கும் பொழுதும்....

57.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக முகச்சவரன் செய்யவில்லை..எனக்கு தாடியுடன் இருப்பது அவ்வளவு பிடிக்கும்..கல்லூரியில் சில சமயம் எனது முஸ்லீம் நண்பர்களுடன் தொழுகைக்கு சென்று அவர்களின் பழக்கங்களை ஒரு ஓரத்தில் இருந்து பார்ப்பேன்...

அப்பொழுது அங்கிருந்து என்னை வித்தியாசமாக பலரும் பார்ப்பார்கள்....அதில் ஒரு பெரியவர் ஏன்பா நீ தொழுகை பண்ண வரலை?? ஏன் உடம்புக்கு என்னாச்சு??என கேட்டார் நான் எப்பொழுதும் போலதாடியை சொறிந்து கொண்டு பேந்த பேந்த விழித்திருந்தேன்....அப்புறம் நண்பன் வந்து இவன் ஹிந்து பிராமின்னு சொல்லி கூட்டிட்டு போனான்....

பள்ளிக்காலங்களில் என்னுடைய நெருங்கிய தோழர்கள் அவர்களே...வீட்டிற்கு தெரியாமல் அவர்களுடன் நோண்பிருந்து கஞ்சி குடித்த அனுபவம் இன்றும் நிலலாடுகிறது.....

அப்பொழுதும் தோன்றியது,இப்பொழுதும் தோன்றுவது....

'' பெயரிலும்,உருவத்திலும்
ஒரு மதத்திலும் வித்யாசம்
பார்க்கின் மனிதம் மறைந்து போகும்...

நான் எனது மதமும்
குலமும்,கோத்திரமும்
வீட்டிலேயே வைத்துவிட்டு வருவேன்..

நீங்கள் எவ்வாறு வரினும்
கவலையில்லை...
நான் நானாக மட்டுமே

வருவேன் என் அடையாளங்கள்
என் பின்னால் தொடரும்
நான் வேண்டுமாயின்

என்னோடு சிரியுங்கள்
என் அடையாளம் வேண்டுமாயின்
அவைகளுடன் சண்டையிடுங்கள் ''

56.
காட்டுத்தீயில்
வெந்து,பனிந்து
மயங்கி,எழுந்து
மீண்டும் துளிர்
விடுகையில்
ஏனோ கடவுளை
காட்டிவிடுகிறது
சிறு புல்லும்
அதன் மீது அமரும்
வசந்தகால
ஒற்றை பனித்துளியும் 
55.
இப்பொழுது தான் 200
கொலைகள் செய்து
அயர்ச்சியாய் வீட்டின்
சுவரில் மாட்டிய
காந்தியும் சிரிக்கிறார்
சன்னலோரம் வரும்
தென்றல் காற்றும்
பயத்துடனே
தொடாமல் செல்கிறது
கை கத்தியினை அதுவும்
வீட்டின் மூலையில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன
அவனது தேவதை கனவுகள்
கால்கள் படபடக்க
எழுந்து நடந்தான்
மலர் ஒன்றைப்பறிக்க
அவனின் சமாதிப்
பூவாய் வைக்க...
54.
அந்த அழகிய நிமிடங்கள்
உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்ந தருனங்கள்

நீ அடிக்கடிக்கேட்கும்
இன்னுமென்னடா???
கேள்விகளும்

பதில் சொல்லாமல்
உன் இமை அசையும்
வடிவங்களில்

கருவிழி பார்த்து
அதில் என்னிடமே
ஒன்றுமில்லா

உலகத்தில் நீ
என்னும் சந்தோஷம்
இருக்கையில்

வேறு என்ன
பேசிவிடப்போகிறேன்
சீசரின் மறைவில்

ஆன்டோனியோ பேசியதையா??
சர்ச்சில் பேசியதையா???
புத்தன் போதித்ததையா??

பிகாசோவையா??? ஷெல்லியையா???
கம்பனையா?? கபிலனையா??
அப்படி எதுவுமில்லை...
உன் கரம் தந்த

பரிசுத்தமும் பாதகமும்
உன் கூந்தல் என்
உடலில் தீட்டிய

வர்ணனையும் அதனால்
ஏற்பட்ட மின்னலையும்
உன் உதடருகில்

ஒட்டியிருக்கும் சாக்லேட்
துணுக்குகளைத்தவிர
இப்பிரபஞ்சத்தில் எது
இருக்கிறது.....
53.
என் கவிதைகளுக்கு 
மட்டும் உயிரிருந்தால்

என்னுடன் சமவெளியில்
கை கோர்த்து நடந்திருக்கும்

என்னுடன் சண்டையிட்டு
வென்றிருக்கும்,

என்னுடன் புதைந்து
என் காதலை சுவைத்திருக்கும்

என்னுடன் புணர்ந்து
என் காமத்தை கொன்றிருகும்

என்னுடன் விளையாடி
என் பால்யத்தை திருப்பியிருக்கும்

என் சாவிற்கும் அழுது
என் கல்லறையில் மௌனித்திருக்கும்

பாவம் அவை கவிதைகளாகிவிட்டதால்
எழுத்துக்களாய் சிலுவை ஏறுகின்றன.....
52.
காதலும் கசக்கிறது
----------------------------
என்னைவிட்டு தூரத்தில்
எங்கோ ஒரு அறையினில்
கையில் கட்டிப்பிடித்து 
உறங்கும் தலையணையில்
என் நினைவாய் உதிரும்
கண்ணீர்த்துளியின்
உவர்ப்பும், இங்கே 
என் அறையில் 
தொடுதிரையில்
உன் படத்திற்கு கொட்டும்
முத்தங்களும்
உன்னை தொட்டதாகவே
இருக்கின்றது....
பிற்காலத்தில் பிறக்கும்
நம் பிள்ளைகளின்
கனவுகளாகிய நம்
காதலும் கசக்கிறது...
51.
கடவுள் ராமர்....நணபன் கி்ருஷ்ணர்...
------------------------------------------------

ஒரு சில விசயங்கள் என்றும் அழகானவையாகவே இருக்கும்...ஏன் என்று நாம் ஆராயும் பொழுது அது மிக ஆச்சர்யத்தையும் நம்மை சில சமயம் அடே போடவும் வைக்கும்

உதாரணத்திற்கு, என் அம்மா மற்றும் உறவினர்கள் நான் இரண்டரை வயதில் இராமாயணக்கதையை சொல்லுவேன் அப்படியே மகாபாரதம் இன்னும் சில இதிகாசக்கதைகள் பின் வயது ஏற ஏற ருத்ரம்,மிருதங்கம் அது இதுனு கத்துக்க வச்சிருக்காங்க...

எல்லாத்துலயும் நான் அரைகுறை இப்போ ஒன்னு கூட ஞாபகத்தில் முழுசா இல்லை என்பது வேறு விசயம்.....

ஆனால் என் சிறுவயதைப்பற்றி சொல்லும்பொழுதுகளில் எல்லாம் நான் இராமாயணத்தை சொன்னதைப்பற்றியே சொல்வார்கள்...எனக்கு இப்பொழுது நினைவில் உள்ளது இவையே சரியோ தப்போ தெரியாது...தவறிருந்தால் திருத்தவும்

''பல மனைவிகள் கொண்ட தசரதமகாராஜா குழந்தை வரம் வேண்டி யாகம் நடத்தினார் அதில் தோன்றிய தேவதை கொடுத்த பாயாசம்?! (இதில் இன்றுவரை இருக்கும் #டவுட்டு அது என்ன பாயாசம சேமியா பாயாசமா?? இல்லை பால் பாயாசமா?? எனக்கு 5 வகுப்பு வந்த பொழுது சேமியா உருவாக்க பல இன்கிரேடியன்ட்ஸ் ்வேணும் அதுவும் போக சேமியாவிற்கு பாக்கெட் பண்ண அப்போ பிளாஸ்டிக் பை இல்லை அதனால் அது பால் பாயாசமாக இருக்கும் என்ற லாஜிக் தோன்ற அப்படியே பால் பாயாசத்தில் விட்டுவிட்டேன்....)

பின் அதை முதல் மூன்று மனைவிகளுக்கு கொடுக்க மிச்சம் வந்த இன்னொரு மடக்கை முதல் மனைவிக்கு கொடுக்க அவளுக்கு 2 பிள்ளைகளும்....மற்றவர்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் மொத்தம் ராமன் இலக்குவனன் பரதன் சத்ருக்கனன் என 4 பிள்ளைகள் பிறந்தனர்...

( பாயாசம் குடித்தால் குழந்தை பிறந்திடமோ என வயிற்றை தடவிப்பார்க்கவி்லலை அதுவரையில் தப்பித்தேன்...)

பின் இவர்கள் குருகுல வாசம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் விசுவாமித்திரர் ராமனை தன் தவத்தை காக்க அழைத்துகொண்டு ்போனார் அங்கே தாடகையை வதம் செய்து அப்படியே சீதையின் சுயம்வரத்தில் கலந்து சிவதனுசை உடைத்து கல்யாணம் செஞ்சு வந்தா இங்க கைகேயி கூனியின் பேச்சைக்கேட்டு தான் வாங்கிய 3 வரத்துல ராமன் காட்டக்கு போனும்,பரதன் நாட்டை ஆளனும்னு சொல்ல

ராமன் ,சீதா , லச்சுமணன் காட்டுக்கு போக அங்க மான் பிடிக்க ராமனும் லச்சுணனும் போக இராவணன் இலங்கைக்கு சீதையை கடத்திட்டு போக வழியில தடுத்த ஜடாயுவ கொன்னுடுறான்...

அப்புறமா நம்ம ஹனுமான் மற்றும் வானர சேனைகளின் துணையோட இராவணன அழிச்சு அயோதிக்கு வந்து நாட்டை ஆண்டார்....இதுவரைக்கும் ராமர் நமக்கு ஹீரோ...ஆனா இந்த லாஜிக் ஓட்டைகளும் அப்புறமா வந்த சீதையின் தீக்குழிப்பு லவ குச கதைகள் கேட்டு பின் ்நாட்களில் நம்ம ராமர்..ஓகே,, HE IS A GODனு ... கொஞ்சம் தள்ளியே நிக்க வச்சார்...

ஆனா இப்போ உள்ள பசங்களுக்கு பிடிச்ச டோரேமான்...சோட்டா பீம் மாதிரி என் காலத்துல வந்த சக்திமான் ்பாப்பாய்...கேப்டன் பிளானட் மாதிரி ஒவ்வொரு சாகசத்துலயும் வித்யாசமா என்னோட ஒட்டியிருந்தார்....அவரோட ஆரம்பமே ரணகளமா இருககும்...துர்கா தேவி வரவாகட்டும், கம்ச வதம் காளிங்க நர்தனம் என ஒரு FANTASY செமயா இருக்கும்...

இராமர் மு்தல்ல மனுசன்னு சொல்லிட்டு அப்புறம் அவரோட கஷ்டங்கள் மட்டுமே பெருசா இருந்துச்சு...

ஆனா கிருஷ்ணர் அப்படி இல்லை ஆள் ஜாலிலோ ஜி்ம்காளா தான்...

ஒற்றை விரல்ல மலையை தூக்குறதும்,
அப்புறம் Snake dance ( காளிங்க நடனம்.),இப்படி போயிட்டே இருக்கும்...

இராமாயணத்துல அனுமாருக்கு இருந்த FANTASY AND ENTHUSIASM இராமர்ட்ட இல்லை.....

ஆனா இவர் அப்படியே ஒவ்வொரு பருவத்துல எனக்கு ஏற்றமாதிரி வந்தார்...பாமா,ருக்மணி கூட காதலாகட்டும்....நடுவுல கோபிகைகளுடன் நடனமாகட்டும்....குசேல உபசரிப்பா இருக்கட்டும்....கர்ண மரணமா இருக்கட்டும் HE ENJOYED WHAT HE IS....

கடைசிகாலத்தைக்கூட அவர் ஏற்றுக்கொண்டவிதம் இராமரோட கம்பேர் பண்ணிப்பார்த்தால் அவரைவிட மிகச்சிறந்த நண்பனாய்,ஆசானாய்,கடவுளாய் இராமரால் இருக்கமுடியாது.....

ஏதோ சின்னப் பையன் சொல்றான் இராமர் ஒழுக்க சீலர்,தர்மம் தவராதவர்னு சண்டைக்கு வராதீங்க...

நான் சொல்ல வருவது இராமர் செஞ்ச\பட்ட விசயங்களை ஒரு TERRIFIC LITE WAY OF APPROACHல கொண்டு போனதால் கிருஷ்ணர் பெட்டர்னு சொல்லவறேன்...ஏன் கடவுளே இப்படியும வெறி ஸ்டிரிக்ட் ஆபீஸரா இருந்தது போரிங்...கொஞ்சம் ஈஸி வே கூட இருக்கலாம்னு டிரை பண்ணின REVISED EDITION கிருஷ்ணரா இருக்கக கூடாது???

தொடரும்....
50.
சில சமயம் அமைதியும்
அழகாய் இருக்கும்...அதன்
ஆழத்தை அறியாவகையில்
நுன் கவியுடன்,மெல்
இசையுடன்,புசிக்கின்ற பொழுது....
49.
சில்லென்ற இளங்காலைப்பொழுதில்
சிறு சாரலாய் மேகமது மழைத்தூவ
மனதிலொரு பாடல் ரீங்காரமிட
மனம் லேசாய் வருடுகிறது.....

முற்பிறவி பயனும் பாவமும்
ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி
ஒரே சமயத்தில் முத்துக்களாய்
மனதில் குழப்பம் ஏற்படுத்த

மழையை ரசிக்கவா???
மனதிலுள்ள பாடலை ரசிக்கவா???
அருகில் இல்லா உன்னை ரசிக்கவா??? என
குழந்தையாய் உன் அருகில் வர

அரவணைத்து முத்தமும் தந்தாய்
இவை எல்லாம் மறந்து அம்முத்தத்தினை
இரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன் இதழ்களில்.... 
48.
நான் அகந்தை மிக்கவன்....
நான்அதிகாரம் துறப்பவன்
நான் கடும் கோபம் இரைபவன்
நான் கவி கதைப்பவன்
நான் காதலிப்பவன்
நான் குழந்தையானவன்

இத்துனை நான் இருந்தும்
புல் மேயும் ஆடாய்
காமம் மேயும் உடலாய்
மட்டும் இருந்திருப்பேன்
நீ இல்லையெனில்
நம் காதல் இல்லையெனில்

சில பலரது படைப்பும்
உன்னையே இட்டிச்செல்கிறது
உன்னுள் என்னையே இடம்பெயர்கிறது
வலைப்பூவில் எழுதிய பலவும்
வருவாரற்று கிடந்ததினால்
கோபமும்,காதலும்.அகந்தையும்
அவற்றை அழித்திடச்செய்தது

பெற்ற பிள்ளையினை
போஜித்திட தாய்ப்பால் இல்லாத
தாயாய் கல்லாகிய மனதுடன்
துளியிரக்கம் ஏதுமின்றி
கொன்று புதைத்து
அடுத்த பிள்ளையை பெற்றெடுப்பதுபோல்

தன் இறந்த பிள்ளைக்கு கிட்டாத
பாலை பக்கத்துவீட்டு பிள்ளையாவது
பருகி வாழாத என ஏங்கும்
அபலைத்தாயாய் இதையும்
மனதோடு புணர்ந்துவிட்டு
மனம் புசிக்க விட்டுவிட்டேன்
தூக்கமில்லா துயிலினைத்தே

47.
மிதமிஞ்சிய மோகம்
மட்டும் இருந்துவிட்டால்
உன்னை துறந்திருப்பேன்

பாழாய்ப்போன காதலும்
மிஞ்சாமல் இருப்பதால்
உன்னையும் என்னையும்
மிச்சம் வைத்திருக்கிறேன் 
46.
கிருஷ்ண மாயம் -3
--------------------------
காலையும் மாலையும்
உன் முகம் மறந்துபோகும்

காண்கின்ற பொழுதினில்
காலம் துவண்டு போகும்

ஐம்பூவும் யாப்பிலியும்
கர்மமென கண்டுசிரித்துவிட்டு

காதல் புரிவது மாயனே
உன் மாயமோகனமோ????

பூவிதழ்கள் குவிந்துகொண்டு
பூங்குழலில் உந்தும் ஓசை

இதயமில்லா காமுகனாய்
இம்சிக்கிறது இதயத்தினுள்

தத்தகிட தித்தகிட என
தத்தித்தாவும் உன் கால்

தண்டையில் தஞ்சம்புக
நாதமில்லையோ?? - எல்லாமுமற்ற

புன் சிரிப்பு இன்று உன்
புருவ அசைவினுள் கண்டுவிட்டேன்

கார்மேக விட்டல ரங்கா உன்
காலடியில் கிடக்க ஆசை...
மயிர்பீறி அசைவுபோல
மனப்பீறி அசைந்து பாடும்

மீராவாய் என்னை மாற்றிவிடாதே
மீண்டுண்ணா கடும்தவம் எய்தி

பொற்பாய சாபமிடுவேன்
மறுபிறவி வேண்டிக்கேட்டு

பெண்ணாய் நான் பிறக்க
என் சிசுவாய் நீ கிடைக்க

யசோதையாய் உன்னிடம்
யாசிக்கின்றேன் அருள்புரிவாய்

யாதும் தெரியா கள்வனைப்போல்
கள்ளச்சிரிப்பு காட்டாதே

கண் இமைக்கும் நேரத்தில்
கவர்ந்துவிடுவேன் உன் காதலினை 

45.
ஊரெல்லாம் சுற்றிவிட்டு
யாருக்கும் தெரியாமல்
பசிக்கின்ற பொழுது
அடுப்பங்கறையினில்
சத்தமில்லாமல் பாத்திரம்

உருட்டி வயிரு
முட்ட உணவருந்தி
வால் மட்டும்
காற்றில் அசைந்து ஆட
வந்த சுவடில்லாமல்

விருட்டென மறைந்து
தனித்தொரு உலகில்
வாழுந்து நம்முடன்
பழகி இருட்டினில்
ஒளிரும்

கண்களைக்கொண்ட
பூனையினைப்போல்
நம் காதலும்
இவ்வுலகில்
தனித்தே வாழும்
44.
ஆணாய் பிறந்ததினால்
அர்த்தம் இல்லாமல்
கவிதை புனைகிறேனோ??

பெண்ணாய் பிறந்திருந்தால்?
கவி எழுதும் வாய்ப்பிருந்தால்?!
என்ன எழுதியிருப்பேன்?!

அப்பாவின் அரவணைப்பின்
கதகதப்பும்,பட்டாடையினை
சுற்றாடவிட்டு வரும் மகிழ்ச்சியும்

நீண்ட கூந்தலின் இரகசியமும்
பருவமெய்திய வலியும்
காதல் அரும்பும் உணர்வுகளும்

அழகியலின் பொறாமையும்
பெண்ணியத்தின் தன்மையும்
காமுகர்களின் கொடுஞ்செயலையும்

விவாக முதல் நாளின்
விண்ணற்ற மகிழ்ச்சியையும்
முதல் ஆண் மகனின் ஸ்பரிசமும்

புதிய குடும்பத்தினரின் பழக்கங்களையும்
தாய் தந்தை அண்ணன் தம்பி தங்கைகளின்
பிரிந்து உயரா உணர்ச்சிகளையும்

கணவனின் அன்பும்,பண்பும்
பேருகாலத்தின் சுயத்தையும்
தாயாகிய மகிழ்ச்சியையும்

பால் குடிக்கும் பிள்ளையின்
இதழின் வருடலையும்
குழந்தைகளின் மழலைகளையும்

இன்னுமென்னவெல்லாம் உண்டோ
அத்துனையும் எழுதியிருப்பேன்
பாழாய் போன ஆணாய் பிறந்ததினால்

எதுவுமில்லை,சுவையுமில்லை,
சுமையுமில்லையென தீண்டாக்காதலையும்
உள் எழும் ஆசைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்


43.
நாளும் பொய்க்கும்
நாவும் மழையும்

மும்மாரி தீங்கில்லா
முதல் விசை

என்றும் பெய்திடும்
அன்பும் அழிவும்

பல்லாங்கு தார்மிகும்
பசியும் ருசியும்

காதலில் மட்டும்
நேர்மை பயக்கும்

நல்லவர்க்கும் தீயவர்க்கும்
எம் தமிழ் என்றும்

42.
பெண்மை,உவகை தரும்
பேதமை மாற்றி நன்மை
இயம்பவரும் நாதம் போற்றி
இம்மை மறுமை நீக்கி
நின் பா தடிகின்றேன்.
41.
இன்னும் சில நாட்களில்
பேச மறந்துவிடுவேன்

இன்னும் சில நாட்களில்
எழுத மறந்துவிடுவேன்

இன்னும் சில நாட்களில்
நடக்க மறந்துவிடுவேன்

இன்னும் சில நாட்களில்
உறங்க மறந்துவிடுவேன்

இன்னும் சில நாட்களில்
நான் தொலைந்துபோவேன்

அந்த சில நாட்களுக்குகாக
சுவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
40.
மரமும் நானும்
போட்டியிட்டு
விதைத்திருந்தோம்

அது தன் விதைகளையும்
நான் என் காதலையும்

விதைகள் வளர்ந்து
வேர்விட்டு துளிர்த்தன

செடியும் வளர்ந்து
கிளை பரப்பி

மொட்டு மலர்ந்து
பூவும் பூத்திருந்தது

உன் மனதில் என் காதல்
எழவே இல்லை

பணமென்னும்
உரமில்லாததால்

கடைசியில் அச்செடியிடம்
புலம்ப தன் முதல் மலரை

மகரந்த சேர்க்கைக்கு முன்னரே
உதிர்த்திருந்தது என் காதலின்
கல்லறையாகிய உன் இதையத்தில் </3

39.
இப்பொழுது கண்ட புகைப்படம் எடுத்தவர் நிஜமாகவே பாக்கியவான்...

குடை கவர்ந்தீரோ ??
குன்றம் எடுத்தீரோ??
அனந்தனுமில்லையோ???
ஆயர்பாடி கோபியருமில்லையோ??
என்னையேன் அழைக்கவில்லை???
வெண்குடை பொற்றி வெள்ளியானை
உலாவரும் நம்பிராஜனே
என்னையேன் அழைக்கவில்லை???
நான் வருமுன்னே நீயே வந்து
குடைபிடித்துக்கொண்டாய்
குடையினுள்
கற்சிலையாய் ஒன்றும்
உயிர்சிலையாய் ஒன்றுமாய்
இரு காட்சி அருள்புரியும்
நின் விஸ்வரூபம் கண்டுவிட்டேன் 


38.
அவசரமாய் காதல்
வளர்க்க ஐந்து தேவைகள்

எங்கும் நிறையும்
நிசப்தமும்

எதிலும் கலக்கும்
ஏகாந்தமும்

எதற்கும் ஏங்கும்
இளமையும்

கவிமொழி மறுப்புரை
பொய்மையும்

இவை யாவுமில்லா
கொரூரம் கூடிக்குலவும்
நீ மட்டும் போதும்

அவரசமாய் என் காதல்
வளர்க்க... 
37.
இப்பொழுதெல்லாம் திருமணங்கள் வெறும் சம்பிரதாயமாகவே நடக்கின்றன,

அதிலும் எங்கள் குடும்ப திருமணங்கள் எங்கோ ஒரு மூலையில் நடக்க அனைவரும் காலை மாங்கள்யதாரனம் முடிந்து சாப்பிட்டு சென்றுவிடுகின்றனர்.

மாலை நடக்கும் நலுங்கு கூட ஏதோ இரு குடும்பங்கள் மட்டும் இருக்க சம்பிரதாயமாக மாறிவிட்டது. எங்கள் வட்டாரத்தில் உள்ள பிராமண குடும்ப திருமணங்களில் இந்த பாடல் பெரும்பாலும் பாடப்படும்...

ஒரு தயிர் குடம் உடைந்தால் கூட உன் கணவனில்லத்தில் எப்படி எதிர்வினைவருமென அழகாய் சொல்லும் பாடல்

''ஓஹோ ஓஹோ தயிர் குடமே உடைஞ்சு போச்சுதே
உடைஞ்சு போச்சுதே கண்ணா உன்னால் ஆனதே..

ஆத்துக்காரர் உன்னை கண்டால் அடிச்சு நொருக்குவர்
அடிச்சு நொருக்குவர் கண்ணா அம்போனு விட்டிடுவர்

மாமியாரும் உன்னை கண்டால் மட்டம் தட்டுவள்
மட்டம் தட்டுவள் கண்ணா மண்டுனு சொல்லிடுவள்

நாத்தனாரும் உன்னை கண்டால் நப்பு கொட்டுவள்
நப்பு கொட்டுவள் கண்ணா நையாண்டி பண்ணிடுவ
36.
உனக்கேற்ற உருவமாய்
எனை மாற்ற ஆசை

உனக்கேற்ற பிழையாய்
எனை மாற்ற ஆசை

உனக்கேற்ற முகிலாய்
எனை மாற்ற ஆசை

உனக்கேற்ற தொடராய்
எனை மாற்ற ஆசை

உனக்கேற்ற துணியாய்
எனை மாற்ற ஆசை

நான் மாறும் முன்பே
நீயும் எனை சேர்த்து

மாற்றிவிட்டாய நாமாக
நம் இதழ்கள் பிரியா வண்ணம்..... 
35.
உணர்வுகளற்ற காகிதமாக
காற்றில் பறக்க ஆசை

யாரேனும் அழகிய 
கவிஞரிடத்தில் கவிதையாகலாம்

மழைக்கால சிறுவர்களிடத்தில்
கப்பலாய் மாறலாம்

நங்கைகளிடத்தில் அழகிய
கோலங்கள் கிடைக்கலாம்

டீக்கடையில் சூடான
போண்டாவை மடிக்கலாம்

சமையல் வல்லுனரிடம்
நளபாக குறிப்பும் கிடைக்கலாம்

ஆண்டவனே காசாகிப்போன
சந்நிதியில் கும்குமம் மடிக்கலாம் -இவையில்லாமல்

சவரக்காரனிடம் மயிர்கலவை
கிடைக்கலாம்

வெள்ளைக்காரனிடத்தில் புறமும்
துடைக்கலாம்

யாருக்கும் பயன்றறு
குப்பையில் கிடக்கலாம்

இவை எதுவுமில்லா சுதந்திரத்துடன்
உணர்வுகளற்ற காகிதமாக
காற்றில் பறக்க ஆசை 

34.
உன்னுள் என்னை சிறை
வைக்கும் ஓவ்வொரு
பொழுதுகளிலும்

உன்னையே என்னை மீட்க
அனுப்புகின்றேன்-நீயோ
ஒவ்வொரு முறையும்

கவிதைகளை பெற்று
காதலுக்கு பலிகொடுத்து
மீண்டும்

சிறைவைக்கிறாய்.. - நம்
இதழ்கள் என்னும்
வாசல் மூடி 
33.
மௌனித்திருப்பதற்கும்
மௌனியாய் இருப்பதற்கும்
வித்யாசம் சில வரிகளே

அவ்வரிகள் நேர்கோட்டிலில்லா
வளையங்களாய் மாறுவது
மௌனங்கள் மறைவதினாலே... 
32.
எல்லாப்பெண்களுக்கும் முதல் முதலில் கட்டும் புடவை சிறிது அழகு சேர்க்கும் போல.... என்னிடம் தான் புடவை கட்டிய புகைப்படம் அனுப்பிய பொழுது தோன்றிய கவிதை அப்படியே டிராப்டில் இருந்தது...இப்பொழுது தான் பார்த்தேன்...

இதை சொன்னா எப்படியும் அதுக்கு மீனிங் என்னடா??னு கேட்பா....

'இடை'யிடையில்
உன் புடவை மடிப்பு விலகி
என்னை இம்சித்து செல்கிறா

31.
ஆதலால் காதல் செய்வோம்
----------------------------------------

இன்னொரு உலக யுத்தம்
வேண்டுமென்றாலும்

நடந்துவிட்டு போகட்டும்
நமக்கென்ன வந்தது???

நம் கரங்கள் கோர்த்து
இருபது விரல்கள் இருக்கி

உடல் மொழியும் உயிர்மொழியும்
ஒரு கோட்டில் பயணிக்க

நம் இதழ் பிரியா வண்ணம்
இவ்வுலக பிரக்ஞை இல்லாமல்

நாம் காதல் செய்வோம்
நமக்கென்ன வந்தது???

இன்னொரு உலக யுத்தம்
வேண்டுமென்றாலும்

நடந்துவிட்டு போகட்டும்
நம் பிள்ளைகள் பாடமாய்
படித்துக்கொள்ள 
30.
யுகம் மாற்றும் யுவதிகளுக்கு
தெரிவதில்லை -அவர்கள்

கண்கள் செய்யும் கொடூரங்களும்
விரல்கள் களைக்கும் விரதங்களும்

இதழ்கள் தரும் இம்சைகளும்
கொங்கைகள் தரும் குடைச்சல்களும்

இடைகள் தரும் இச்சைகளும்
குழல் தரும் குறுகுறுப்பும்

அழகாய் ரசிக்கும் ஆண்களை
மட்டுமே வாட்டி வதைக்கும்
செல்ல சைத்தான்கள் என 
29.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
---------------------------------------------------

என் கவிதைகளுக்கும்,கதைகளுக்கும் மட்டும் தனியாக நடத்திவரும் #மீளாகவிதைகள் -அசதியாடல் பக்கத்தில் போடும் பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களிடித்திலும் இந்த பக்கத்தை பகிருங்கள். உடன்பாடிருந்தால்

எப்போதாவது டேக் செய்யும் மக்களும் எனது டேகிங்கில் லைக்குவதும்,கமென்டிடுவதுமாய் இருப்பதற்கு பதிலாக அந்த பக்கத்தில் அதை சிரமம் பார்க்காமல் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....

இப்பக்கத்தினை தொடர லைக்குகளும் , பதிவுகளும் அதிகம் வேனுமாம்.... எனக்கு ஏதேதோ statistics காமிச்சு பயமுறுத்துராங்க மார்க் அய்யா..
-நன்றி
28.
''காதலுக்கு கண்கள் இல்லை'' என்று
யார் சொன்னது??

கண்கள் இருந்ததால் தான்
இமைகள் மூடியது

இமைகள் மூடியதால் தான்
உறக்கம் வந்தது

உறக்கம் வந்ததால் தான்
கனவும் வந்தது

கனவும் வந்ததால் தான்
நீயும் வந்தாய்

நீயும் வந்ததால் தான்
சண்டையிட்டாய்

சண்டையிட்டதால் தான்
காதல் செய்தாய்

காதல் செய்த்தால் தான் -என
இழுக்கும் முன்பே

இதழ்கள் உரசி
இதயம் தீப்பிடிக்க

உடல்கள் உடையும் வரை
முத்தம் தந்தால்...   
27.
ஓநாய்கள் எப்பொழுதும்
ஓநாய்களாய் இருப்பதில்லை

அவைகள் ஆடுகளாய் மாறி
மந்தைகயில் கலந்துவிட்டு

தினம் ஒரு ஆடாய் உண்டு செழிக்க
இயற்கை பரினாமம் அவைகளை

ஓயாடுகளாய் மாற்றிவிட்டு இன்னும்
வேடிக்கை பார்க்கிறது - கடைசியில்

மிஞ்சும் ஓயாடுகளை மனிதன்
தின்னும் லாவகங்களை நோக்கி

Friday, 18 October 2013

26.
தேடலுக்கு பிறகு 
வரும் காதலும்

காதலுக்கு பிறகு
வரும் தேடலும்

ஒன்றாயிருப்பினும்
சிலது மட்டுமே 

காமத்தில் கலக்கின்றன 
மற்றவை திரிந்துவிடுகின்றன♥
25.
கலவிப்பாட்டு
---------------------
முகம் மறைக்க மார்பில்
இடம் கேட்கிறாய்

முதல் முத்தம் உன் முன்
தலையிலா இடுவது??

கண் பார்க்க இமைகள்
மறுதலித்த போதும்

இதயச்சத்தம் கேட்டு
என்னவோ கதைகிறாய்

இரகசியக் காட்டுக்குள்ளே
இரசனையில்லா கடவுளாக

இதழ்களில் மட்டும் இத்தனை
சுவைகள் எதுக்கடி தந்தாய்??

உச்சி முதல் உரசும்
உன் இதழும் காய்கிறதடி

என் இதழ் பக்கம்
வரும் முன்னே?!

இன்னும் என்ன வேண்டும்
எடுத்துச் செல்

தயை செய்து காதல்
பார்வை வீசாதே

மூர்ச்சையாகிப்போவேன்
மீண்டும் தொடங்கும் முன்

எதுவும் செய்யாமல்
என் மீது படுத்துறங்கு

விடிந்த பின் செய்ய
வேலைகள் அதிகம்............. 
24. எல்லாரும் ரக்ஷாபந்தன் வாழ்த்து கதைகள் சொல்லியாச்சா??? எனக்கு இதுலாம் அவ்வளவா பழக்கமில்லை இன்னைக்கு வேறு ஒரு ஸ்பெசல்..

இன்று ஆவணி அவிட்டம்..சூரியபகவானுக்கு மிக உகர்ந்த நாளாம்.எங்க ஓடுறீங்க??? அதை பத்திலாம் மொக்கை போடலை..முழுசா தெரியவும் செய்யாது... இது வேற

எப்போதும் போல் காலை குளித்து முடித்து பிரம்மதேசம் (பெயர்காரணம் தனிபதிவா போடலாம் அவ்வளவு ஸ்பெசல்) சென்று எப்பொழுதும் போல கடனா நதிகரையில் உள்ள கோவிலுக்கு சென்றாயிற்று...

எப்பொழுதாவது திருமணத்தில் சந்திக்கும் பெண்கள் போல இங்கு ஆண்கள் சற்று பொறாமையுடனேயே பேசி பழகும் ஒரு நாள் இன்று..

''ஏலே மாமாக்கு பவித்ரத்தை குடு... அங்கதாம்ல இருக்கும் அந்த பஞ்சாத்ர ருத்ரனி...நன்னா கண்ணை வைச்சு பாருடே...

""சுகர் பேசன்ட்லாம் ஆத்துல காப்பி குடிச்சின்டு வந்தேளா?? இங்க முதல்ல யஜூர் வேதத்தை முடிச்சிட்டு நம்ம ரிக்குவருவோம் அது வரைக்கும் சத்த உக்காருங்கோ.. "

என எங்கும் எளிதில் கேட்க கிடைக்காத நெல்லை பிராமணத்தமிழ் கேட்கலாம்...

சில வருடங்கள் மட்டுமே இப்படி ரிக்,யஜூர் சேர்ந்து வரும் மற்ற வருடங்கள் எங்களுக்கு முதல் நாள் வந்துவிடும்...
இது எரிச்சலாக்கும் நான் அப்படியே கடனாவில் கடனே என்றில்லாமல் ஐக்கியமாகிவிடுவேன்..இடுப்பளவு தண்ணீரில் உள்ளிருக்கும் மணல் அப்படியே தங்கம் போல் ஜொலிக்கும்....
இப்பொழுது அதுவுமில்லை மணல் அள்ளி அள்ளி ஆற்றை கற்பழித்துவிட்டுள்ளனர்...

'' ஓம் பூஹூ. நமோ பார்த்த... ஸ்வாகாஹ: ''போன்றவற்றை நான் ஒருவித மிரட்சியுடன் திரும்ப சொல்வேன்..

அந்த ஹோமப்புகை கண்களுக்கு சிறிது எரிச்சல் குடுத்தாலும் சளி சுத்தமாக போய்விடும் அதன் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பொழுது கண் எரிச்சல் தவிர எதுவுமில்லை சாணமும் உமியும் கூட தரம் மாறிவிட்டது..போலும் 

பூணல் கொடுக்கும் பொழுது என் பக்கத்தில் இருந்த பெங்களூரு வாசியான சாப்ட்வேர் இன்ஜினியருக்கு 1 பூணல் கொடுத்து எனக்கு 2 கொடுத்தார் வாத்தியார்..ஆனால் அவருக்குத்தான் திருமணமாகி குழந்தை இருக்கு, நியாயமா 3 கொடுத்திருக்கனும் 

இதை பார்த்துட்டு அப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட ''உன் பையன் பிரம்மச்சாரியா இல்லை குடும்பஸ்தனா?? நீயே கேட்டு சொல்லு''னு ஒரு பிட்டு போட ஒரு பரேட் நடந்தது தனிக்கதை 

எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்தால் வடை பாயசத்துடன் சமயல் வாசம் ஊட்டுப்பிறையிலிருந்து வாசல் வந்து எங்களை அம்மாவின் ஆரத்தியுடன் வரவேற்கும்...

இன்னைக்கு அம்மா ஆரத்தி எடுக்குறப்போ சீக்கிரம் செட்டிலாகி அடுத்தவருடம் தலை ஆவணிஅவிட்டத்துக்கு ஆரத்தி எடுக்கனும்னாங்க அதுக்குத்தான் அர்த்தம் புரியலை..

ஒரு வழியா வயிரு முட்ட வடை பாயசத்துடன் சாப்பிட்டு பூணூல் மாற்றியாயிற்று.. இனிமேலாவது எப்பொழுதும் ''பேஸ்புக் தன்நம:'' னு இல்லாமல் 2 வேளை சந்தியாவந்தனம் செய்யனும்...

இது எல்லாத்துக்கும் முன்னாடி அப்பாகிட்ட இன்னொருவாட்டி அபிவாதையே கேட்டு மனப்பாடம் பண்ணனும்...

23.
உலகம் இரண்டொரு
மொழியில் இயங்கச்செய்து

பெண்மையும் ஆண்மை
இடத்தாய்க்கொண்டு

பெருகி வரும் பசிபோல
இன்னும் இருக்கும்

இருக்கமாய் அரவணைத்துறங்கும்
இனியவளின் உறக்கம்

இடையூரில்லா வண்ண
மொழிபாடும் மௌனத்தலைவனிடம்.... 
22.
விழியிரண்டில் வழியும் நீர்த்துளி
காணல் நீரில் மீனாய் மறைகிறது
உன் விரல் தடுப்பணைப்பதாலே 

21.
மூடிய கரத்தினுள்
என்ன இருக்கிறது
எனக் கேட்கிறாய்.
இது ஆயகலைகளில் ஒன்று என்கிறேன்.
அப்படியா என ஆச்சர்யமுறுகிறாய்.
மீண்டும்
வினவுகிறாய்
மூடிய கரத்தினுள்
என்ன இருக்கிறது
என்கிறாய்,.
கண்மூடி ஒருகணம் யோசிக்கிறேன்.
சீக்கிரம் சொல் என்கிறாய்.
இன்னும் கண்திறக்கவில்லை
நான்.

மூடிய உன் கரத்தை
என்னிரு கரங்களாய் பற்றிக்கொள்கிறேன்.
"உன் மூடிய கரத்தினுள் இருப்பது
எனக்கான நிம்மதி.
நான் யாசிக்கும் பேரன்பு.
நான் கண்ணீருகுத்தபின் தேம்பிச்சரியும் பொன்மடி
நான் வீழ்ந்தபோழ்து எனைத் தேற்றித் தலைகோதும் உன் கைவிரல்கள்
நான் அடங்காத பேரலையாய் தளும்பித் ததும்புகையில் எனைச் சேமிக்கும் பெண்தேக்கம்
நான் ஆழ்ந்து உறங்குகையில் என் கனவுகோதும் மயிலிறகு
நான் அரற்றிச்சிரிக்கையில் எனை அதட்டி வைக்கும் அன்னைமொழி
நான் நானாக மறுக்கையில் எனைத் திருப்பித் தரும் தேவவரம்
நான் நானாக மறுகுகையில் எனைப் பெருக்கித் தரும் போதிமரம்
நான் எல்லாமுமாகையில் எல்லாமுமாகும் இன்னொருவள்
நான் எதுவுமற்றிருந்தாலும் எல்லாமுமாகும் என்னொருவள்
மொத்தத்தில்
உன் கைரேகைப்படுகையில் ஓடிக்கொண்டிருக்கும்
காதல் நதி என்கிறேன்."
கரங்களை விலக்குகிறேன்.
உன் கரத்தைப் பிரிக்கிறாய்.
என்னிதழ் பதிக்கிறேன்.
பிறக்கையில் அது வியர்வை.
இனி அதற்கொரு பெயர்வை.
அது காதல்நதி.

20.
எதுவுமில்லா மனநிலையில்
ஒரு கவிதை எழுதத்துடிக்கிறேன்

எல்லாமுமாய் என்னுள் வந்து
எதுவுமற்ற என்னை

எல்லாமுமாய் மாற்ற இந்த
காதலுக்கும் உன் இதழ்களுக்கும்

எப்படித்தெரிந்தது?? இவற்றுள்ளேயும்
நுழைந்துவிட்டு காமமாய் சிரிக்கின்றது 

19.
வெண்ணை தேடி நண்பர்களுடன் வந்து
விட்டத்திலிருக்கும் வெண்ணை குடமெடுப்பாயோ???
தவறி விழும் குடத்தின் சத்தம் கேட்டு
ஓடிவரும் யசோதையினிடத்து

குறும்பாய் உடைந்த பல்லைக்காட்டி சிரிப்பாயோ??
உடை குடமும் முக்கியமில்லை
நிறை வெண்ணையும் முக்கியமில்லை
உள்ளடி பட்டுவிட்டதா என தடவிப்பார்த்து- எதுவுமில்லையென

கரும்பாய் காதை பிழியும் தாயினடத்தே
அரும்பாய் அழாமல்...வாய் திறந்து
ஞாலம் காட்டும் மாயவா!!- அம்மா என்றழைத்தால் போதும்
திருகிய காதில் வலித்திருக்குமென முத்தமிடுவாள் அசட்டுத்தாய்♥
18.
கந்தக தேசத்தின் காரிருள் பெண்ணே
புகை மூடி புன் சிரிப்பு காட்டும் முன்னே

காற்றில் கரைந்து போகிறேன்
காதலில்லாமல் பார்த்துக்கொள்

வெண்ணிற ஆடை போர்த்தி
வின்வெளி உலவும் விசித்திரம் நீ

தரிகெட்ட மனம் தடையில்லாமல் சுற்றித்திரிய
தார்சாலையின் வேகத்தடையாய்

நின் மின்னல் இடை- அதில்
நிதமும் பூக்கும் நிசப்தம் நானோ??

நிறை மழைக்காலம் நீங்கா நிலவொளியில்
நீர் தவளையாய் கொக்கறிக்கின்றேன்

ஒரு வார்த்தை தூவிச்சென்றாய் உன் பெயரென
ஒரு வித மயக்கத்திலே பிதற்றுகின்றேன் என் பெயரை

கரிசல் காடாய் கிடந்த மனதில் பூக்கும் ஒற்றைக்
கள்ளி நீயடி உனக்காக என்

உயிர் முழுதும் தந்துவிட்டேன்
உடையேதுமில்லா எனக்கு
உனை உடுத்தத்தருவாயோ?
17.
பிரசவ அறையினிலிருந்து
பிரவேசிக்கும் அந்த நெடியும்
வீல் என கூச்சலிட்டு
வெளிவரும் அந்த ஒலியும்

ரோஜா இதழின் ஸ்பரிசமும்
பால் மணம் பகிரும் தேகமும்
இமை மூடி பூஞ்சிரிப்புமாய்
பிறந்துவிட்டாள் என் தேவதை என

விழியோரம் வழிந்த கண்ணீரும்
கை குலுக்கி வாய் தினிக்கும் இனிப்பும்
எதுவும் ஏறவில்லை -உன் அழகை கண்டு


மயங்கிக்கிடந்த உன் அம்மாவின்
நெற்றியில் இட்ட முத்ததிடம் கேள்
என் மகிழ்ச்சி என்னவென்று அது சொல்லும்

தலை நிற்காமல் இருப்பாய் என்று
தலையோடு சேர்த்துப்பிடித்த முதல் நொடி தோன்றிய
உணர்வுகள் வடிக்க தமிழில் வார்த்தையில்லை...

பால் கிண்ணி எடுத்துக்கொண்டு
அழும் உன்னை அடிமடியில் படுக்கவைத்து
ஒற்றைக்காலின் ஓயாத அசைவும்

உன்னை உறங்க வைக்க நான் படும் பாடும்
என் தோளில் நம்மை மறந்து தூங்கிடும்
உன் அம்மாவின் உறக்கத்தில் கனவாய் வருகின்றதாம்
16.
பெரும் கோபமும் சண்டையும் வாதங்களும்
என்னை பின் தள்ளும் பொழுதும்

உடன் உன்னையும் இழுக்கின்றது
என்னுள்ளிருக்கும் உன் காதல் 
15.
சின்னஞ்சிறு குழந்தையாய்
வாழ்வது அத்துனை சுலபமில்லை

பசிக்கின்ற பொழுது
அழ மட்டுமே தெரியும்

பலர் தூக்கும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

சிலர் கொஞ்சும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

சிலர் முத்தமிடும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

துணி மாற்றா எரிச்சலிலும்
அழ மட்டுமே தெரியும்

தூக்கம் தொலைந்த பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

எதாவது கடித்துவிட்டாலும்
அழ மட்டுமே தெரியும்

ஆயினும் தன் அம்மாவிற்கு மட்டுமே
அழுகையின் அர்த்தம் புரியும்